‘ஜெய் பீம் வன்னியர்களை தாக்குகிறதா?’ – எழுத்தாளர் புகார்… இயக்குனர் வருத்தம்..!


உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படத்தை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் முதல் பல பிரபலங்கள் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ஜெய் பீம் படம் குறித்த ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரது பெயர் ஜெய் பீம் படத்தின் டைட்டில் கார்டில் பார்த்திருக்கலாம். அப்பதிவில், ஜெய் பீம் படத்தில் பழங்குடியின இளைஞரை அடித்து கொள்ளும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதில், “விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வாகவே எனக்கு வாய்த்துப்போனதில் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் சினிமாவின் மீது எனக்கு எப்போது ஈடுபாடு இருந்ததில்லை.

இச்சூழலில் வாசகராய் அறிமுகமாயிருந்த தம்பி ஒருவர் என்னை பார்க்க வருவதாய் சொல்லியிருந்தார். அதன்படிக்கு நான் வீட்டில் காத்திருந்த வேளையில் நாலைந்து பேர்களுடன் தம்பி மகிழுந்தில் மணக்கொல்லை வந்தார்.

தலமானாக தெரிந்தவரை இயக்குநர் என அறிமுகம் செய்துவைத்தார். மேலும் என் எழுத்தின் மீது அக்கறை கொண்ட ஊடகவியலாளர் அண்ணாச்சி ஒருவரும் தொலைபேசி செய்து விஷயத்தை சொன்னார்.

கதை கம்மாபுரம் காவல்நிலையத்தில் ரொம்ப நாளைக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம். நானும் கேள்வி பட்டிருக்கிறேன். படம் இந்த பகுதியின் களம் என்பதால் இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு வட்டாரமொழியில் இருந்தால் சிறப்பாக இருக்குமென்று பிரதியில் மாற்றித்தரவேண்டுமென சொன்னார்கள்.

Also Read  ஒரு வாரத்தில் 12 சித்தா மையங்கள் - அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.

எனக்கு அதுவெல்லாம் பரிச்சயமில்லாத துறையாக இருந்தாலும் ஊருக்கே வந்துவிட்டதில் நானும் தயக்கத்தோடு சம்மதித்தேன்.

எனக்கு காட்டப்பட்ட பிரதியில் படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய “எலிவேட்டை” என்றே இருந்தது. உரையாடல்களும் சற்றேறக்குறைய இப்பகுதியின் மொழிநடையாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு சொன்னேன்.

மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாக தெரியவில்லை. அந்த பெயர்களையும் சரிசெய்து கொள்வதாகவும் சொன்னார். கூடுதலாய் ஒரு ஒப்பாரிப் பாடல் வேண்டுமென்றார்கள்.

நான் எழுதிக்கொடுத்தது அவர்களுக்கு திருப்தியாக தெரியாததால் நானும் விட்டுவிட்டேன். அந்த உரையாடல் தொடர்பான சிறு வேலைக்காக எனக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுத்தார்கள்.

இதனிடையில் கம்மாபுரம் பகுதி பச்சைப்பசேலென இருளர் வாழ்வியல் காட்சிக்கு சரியாக வராது என படப்பிடிப்பை விழுப்புரம் பகுதியை தெரிவு செய்து படப்பிடிப்பை முடித்திருந்தனர்.

பிறகொருநாள் படம் திடுமென பெயர்மாற்றம் பெற்று “ஜெய்பீம்” என விளம்பரம் வந்தது. தொடர்ந்து “தலைப்பை மனமுவந்து கொடுத்த கதாநாயகரது நன்றி நவிலல்” செய்தியையும் பார்த்தேன். அப்போதே எனக்குக் கொஞ்சம் யோசனைதான்.

நேற்று படத்தை பார்த்தவர்கள் எனது பெயர் நன்றி அறிவிப்பில் வந்தததை மகிழ்வோடு சொன்னார்கள். கூடவே வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியையும் வருத்தத்தோடு பதிவு செய்தார்கள். எனக்கு தெரியாமல் இது நடந்திருக்காது என்பது மாதிரி தொடர்ந்து அழைப்புகள் விசாரிப்புகள்.

நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது இந்த படத்தில் வட்டார உரையாடல் தொடர்பாக மிக சொற்ப வேலையை மட்டுமே நான் செய்திருக்கிறேன். மேலும் என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியில் வன்னியர் கலசம் போன்ற குறியீடுகளெல்லாம் அப்போது அதில் இல்லை.

Also Read  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் - இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்..!

மீறி இருந்திருந்தால் நிகழ்விற்கு சற்றும் பொருத்தப்பாடு இல்லாத அந்த பகுதியை நீக்க சொல்லியிருப்பேன். அல்லது நான் விலகியிருப்பேன்.

இயக்குநர் நல்ல வாசகர், அன்பானவர்தான். அந்த அக்கினிக் குறியீடுகள் இல்லாமலேயே படம் சிறப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தற்கால அரசியல் சூழலை கருத்திற்கொண்டு படத்தின் வியாபாரம், விறுவிறுப்பிற்காக எல்லோரையும் போல நிகழ்விற்கு சற்றும் தொடர்பில்லாத வன்னியர் வெறுப்பு அரசியலை கையிலெடுத்திருக்கிறார் போலும்.

எல்லா சாதியிலும் மோடுமுட்டிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். வன்னியர்களிலும் அந்த ஆய்வாளர் போன்று இருக்கவும் கூடும். அதற்காக ஒரு சமூகத்தின் குறியீடான அக்கினிக் கலசத்தை பின்னணியில் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் வன்முறையாளராக கொலையாளியாக காட்ட முயல்வது மிக மோசமான மனநிலையே.

இத்தனைக்கும் உண்மை நிகழ்வில் அந்த காவல் ஆய்வாளர் வன்னியரில்லையென ஆதாரத் தகவல்களோடு சொல்கிறார்கள். மனசாட்சியை முற்றும் அடகு வைத்துவிட்டு வேறொரு சமுதாயத்தை சேர்ந்தவர் செய்த கொலைக்கு வன்னியரை அடையாளம் காட்டியிருக்கிறார்.

படம் சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள். முற்றும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்ட இருளர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெருந்துயரை ரத்தமும் சதையுமாக சொல்கிறது என்கிறார்கள். வாழ்த்துகள்.

அதேசமயம் தூக்கிவிட்டு ஈரக்குலையில் குத்தியது போன்று எனக்கு நன்றியும் தெரிவித்துவிட்டு இன்னமும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கிக்கிடந்து வன்முறையாளர்கள் என்கிற அவப்பெயரோடு கூடுதலாய் கொலையாளிகள் என எங்களை சித்தரிக்கிற தங்களின் (இயக்குநரின்) சராசரி செயலைத்தான் என்னால் அங்கீகரிக்க இயலவில்லை.

Also Read  "எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை" - புகழேந்தி பரபரப்பு பேட்டி!

எதிர்வரும் காலத்திலாவது சமாசம்பந்தமில்லாத வன்னியர் வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் படமெடுக்க எங்கள் குலதெய்வம் முதனை செம்பையனார் தங்களுக்கு அருள்புரிவாராக” என பதிவிட்டுள்ளார்.

மேலும், குறிப்பு என பதிவிட்டு, “இது எனது தனிப்பட்ட ஆதங்கம். பின்னூட்டமிடுபவர்கள் கண்ணியம் கொள்க” எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு இப்படத்தின் இயக்குனர், “தவறுதலாக அந்த காலண்டர் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, அது சாமி படமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளதாக எழுத்தாளரே பதிவிட்டுள்ளார்.

அதில், “சற்று முன்னர் “ஜெய்பீம்” திரைப்படத்தின் இயக்குநர் அலைபேசியில் பேசினார். சம்பந்தப்பட்ட காட்சி பீரியட் காட்சியாக எடுக்கையில் ஆர்ட் சைடில் தவறுதலாக அந்தக் காலண்டர் வந்து விட்டது எனவும் அதற்கு ஏதும் உள்நோக்கம் இல்லையென்றும் சொன்னார்.

இதனால் ஏற்பட்ட எனது சிரமங்களை அவர் உணர்வதாகவும் வருத்தப்படுவதாகவும் கூறினார். குறிப்பாக தான் ஏதும் உள்நோக்கத்தோடு இல்லை. அப்படியிருந்தால் தங்களைத் தேடி ஊருக்கு வந்திருக்க மாட்டேன் என்றார்.

நேற்றைக்கே இக்காட்சி தொடர்பான இக்கட்டை உணர்ந்து சம்பந்தப்பட்ட காலண்டரை தொழில்நுட்ப ரீதியாக ‘சாமி’ காலண்டராக மாற்ற டெல்லியில் உள்ள அமேசான் அலுவலகத்துக்கு சொல்லிவிட்டதாகவும் மாற்றிய பிரதி அப்டேட் ஆக இரண்டொரு நாள் ஆகுமெனவும் அதிகபட்சம் மூன்று நாட்களில் திருத்தப்பட்டக் காலண்டர் காட்சியோடு வந்து விடுமெனவும் உறுதியளித்தார்.

உணர்வுகளை புரிந்துகொண்ட இயக்குநருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விவேக்கிற்காக பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சியூட்டும் காரியம்..!

Devaraj

இன்றைய தலைப்புச் செய்திகள் | 19.5.2020

sathya suganthi

“நான் ரொம்ப பிஸி..!” – கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்..!

Lekha Shree

கண்மணி அன்போடு காதலன் .. நயன்வுடன் விக்னேஷ் சிவன்!!!

suma lekha

“போட்டின்னு வந்துட்டா நீங்க ரெண்டு பேரும் எதிரிங்க!” – வெளியானது ‘எனிமி’ படத்தின் டிரெய்லர்..!

Lekha Shree

குக் வித் கோமாளி இறுதி போட்டியில் என்ஜாயி என்ஜாமி! வெளியான வேறலெவல் புகைப்படம்..

Jaya Thilagan

பிரபல யூடியூப் சமையல் கலைஞர் ‘டாடி’ ஆறுமுகம் மகன் கைது..! காரணம் இதுதான்..!

Lekha Shree

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவன் – மாணவி மர்ம மரணம்…! ஆணவக் கொலையா?

Lekha Shree

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை தோற்ற விரக்தியில் கல்லூரி மாணவர் தற்கொலை

Tamil Mint

இயக்குனர் பாலா திருமணத்தில் விக்ரம்-சூர்யா… யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!

Lekha Shree

தபால் வாக்குகள்…! அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை…!

Devaraj

ஜெ.வுக்கு மட்டுமின்றி எம்.ஜி.ஆருக்கே நான் தான்…! சசிகலா பரபரப்பு செல்போன் பேச்சு…!

sathya suganthi